சாமந்தமலை -பெருங்கற்கால குத்துக்கல் Megalith - menhir
இரும்புக்கால கலாச்சார மக்கள் இறந்தோரின் ஆவி அழிவதில்லை என்பதில் நம்பிக்கைக் கொண்டோராய் இருந்ததால் பெருங்கற்களைக் கொண்டு இறந்தோருக்கு நினைவுச் சின்னங்களை உருவாக்கினர். அச்சின்னங்களில் இறந்தோரின் ஆவி தங்குவதாக நம்பினர். கல் திட்டை, கற்பதுக்கை, கல்வட்டம், கற்குவை, குத்துக்கல் ஆகிய பெருங்கற்படைச் சின்னங்கள் தமிழகத்தில் உள்ளன. முதுமக்கள் தாழி மற்றும் சுடுமண் ஈமப்பேழை ஆகியவையும் மண்ணால் ஆனவையாய் இருந்தாலும், அவையும் இரும்புக் காலத்தில் இறந்த மக்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டதால் பெருங்கற்படைச் சின்னங்களாகவே கொள்ளப்படுகின்றன. பிற அனைத்து வகைகளும் ஆவணப்படுத்தப்பட்டு குத்துக்கல் வகை மட்டும் கிருஷ்ணகிரியில் இல்லாமல் இருந்த நிலையில் சாமந்தமலையில் அண்மையில் இக்குத்துக்கல் வகைக் கண்டறியப்பட்டது. எனவே இது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட முதல் குத்துக்கல் என்னும் பெருமையைப் பெறுகிறது. குத்துக்கல் (Menhir) என்பது சுமார் 15 அடி உயரத்தில் அடி பெருத்து முனை சிறுத்து காணப்படும் கல்லாகும். இறந்தோரின் நினைவாக தற்போதும் இறந்தோர் புதைக்கப்பட்ட சவக்குழியின் தலைப்பகுதியில் ஒரு கல்லை நடும் வழக்கம்...